×

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பறிமுதல்

*கடைகளுக்கு சீல், அபராதம்

வேலூர் : வேலூரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் ரெய்டில் 7350 குட்கா, புகையிலை பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டு 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்ற புகையிலை சார்ந்த பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு, வீடுகளிலும், ரகசிய இடங்களிலும் பதுக்கி வைக்கப்பட்டு கடைகளில் பாக்கெட்டுகளின் வடிவத்தை மாற்றி அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அவ்வபோது போலீசார் நடத்தும் அதிரடி வேட்டையில் கடத்தல் குட்கா, புகையிலை பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டு, கடத்தல் ஆசாமிகளும் கைது செய்யப்படுகின்றனர்.

ஆனாலும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் நடமாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை காட்பாடி, கொணவட்டம் பகுதிகளில் வேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செந்தில், ராேஜஷ் ஆகியோர் போலீசாரின் உதவியுடன் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான ரெய்டு நடத்தினர்.
இதில் கழிஞ்சூர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட ரெய்டில் ஒரு கடையில் மட்டுமே 7,008 புகையிலை, குட்கா பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

தொடர்ந்து மாலை வரை கொணவட்டம் பகுதியில் முள்ளிப்பாளையம் தொடங்கி கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு வரை சந்தேகத்துக்குரிய 9 கடைகளில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் பள்ளி அருகில் உள்ள ஒரு பங்க் கடையில் 350 புகையிலை மற்றும் கூல்கிட் எனப்படும் புகையிைல பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

தொடர்ந்து மேற்கண்ட 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டு 2 மாதங்களுக்கு கடைகள் திறக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டதுடன், இரண்டு கடைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் செந்தில் கூறும்போது, ‘குறிப்பாக பள்ளி அருகில் உள்ள கடைகளில் ரெய்டு நடத்தப்படுகிறது. இந்த சோதனை தொடரும்’ என்றார்.

The post உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Food ,Vellore ,Food Safety Department ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் சீல் இன்றி...